‘நாளைய இயக்குனரி’லிருந்து இன்றைய இயக்குனராக களமிறங்கியிருக்கும் இன்னொரு படம் ‘தெகிடி’. சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாக்கப்பட்டிருக்கும் இப்படம் ரசிகர்களை எந்தளவு ஈர்த்துள்ளது?
கதைக்களம்
நமக்கே தெரியாமல் நம்மை ‘பகடை’ காயாய் பயன்படுத்தி விளையாடப்படும் சூது விளையாட்டே ‘தெகிடி’.
எம்.ஏ. கிரிமினாலஜி படித்து முடித்ததும் ‘ரேடியல் டிடெக்டிவ் ஏஜென்ஸி’யில் வேலைக்குச் சேர்கிறார் நாயகன் வெற்றி (அஷோக் செல்வன்). அவருக்குக் கொடுக்கப்படும் ஒவ்வொரு புராஜெக்ட்டையும் வெற்றிகரமாக முடித்துக் கொண்டே வருகிறார். அதில் நாயகி மதுவைப் (ஜனனி) பற்றிய தகவல்களையும் அவருக்குத் தெரியாமல் சேகரித்துத் தரும்படி வெற்றியிடம் புராஜெக்ட் ஒன்று வருகிறது.
ஏற்கெனவே ஒருமுறை வெற்றியும் மதுவும் சந்தித்திருப்பதால், இருவருக்குள்ளும் ஈர்ப்பு உருவாகி, அது காதலாக மாறுகிறது. எல்லாம் சந்தோஷமாக போய்க் கொண்டிருக்கும்போதே அடுத்தடுத்து நடக்கும் சில மரணங்களால் பீதியடைகிறார் வெற்றி. அந்த மரணங்களுக்கும் அவருக்கும் ஏதோ சம்பந்தமிருப்பதுபோல் உரைக்க, அதை கண்டுபிடிக்க களத்தில் குதிக்கிறார் நாயகன். அந்த மரணங்களுக்கு பின்னணியில் சொல்லப்படும் ஒவ்வொரு சம்பவங்களும் அடுத்தடுத்த திருப்பங்கள். அதை வெண்திரையில் காண்க.
படம் பற்றிய அலசல்
தமிழ்சினிமாவில் இதுவரை சொல்லப்படாத ஒரு கதையைத் தேர்ந்தெடுத்ததற்காக அறிமுக இயக்குனர் பி.ரமேஷிற்கு ஒரு வெல்கம் பொக்கே! இப்படிக்கூட மோசடிகள் நடக்குமா என நம்மை விழி பிதுங்க வைத்திருக்கிறார். படத்தின் ஆரம்பக் காட்சிகள் கொஞ்சம் ஸ்லோவாக நகர்கின்றன. அதன்பிறகு நாயகனும், நாயகியும் சந்தித்துகொண்டதும் கதை கொஞ்சம் வேகம் பிடிக்க, இடைவேளையில் விழும் சஸ்பென்ஸ் முடிச்சுக்களால் இரண்டாம் பாதியை பார்க்கும் ஆவல் அதிகரிக்கிறது. ஆனால், அதன் பிறகு நடக்கும் விஷயங்களும், அதற்கான காட்சிகளும் ரசிகர்களுக்கு பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. ‘அதெப்பிடி... இதெப்பிடி...?’ என அடுத்தடுத்து மனதில் கேள்விகள் ஓடிக் கொண்டே இருக்கின்றன. இறுதியில் இவர்தான் இதற்கெல்லாம் காரணகர்த்தாவாக இருக்கும் என நாம் யூகித்து வைத்ததை அப்படியே காட்டியபோது, ஆரம்பத்தில் படத்தின்மேல் இருந்த ஆர்வம் சுத்தமாக வடிந்து போகிறது. க்ளைமேக்ஸ் முடிந்த பின்பும் வலுக்கட்டாயமாக மீண்டும் ஒரு ட்விஸ்ட்டை வைக்கத்தான் வேண்டுமா?
நடிகர்களின் பங்களிப்பு
அஷோக் செல்வனைப் பொறுத்தவரை ‘வில்லா’வில் நாம் அவரை எப்படிப் பார்த்தாமோ அதேபோல்தான் இதிலும் இருக்கிறார். எல்லாவிதமான உணர்ச்சிகளுக்கும் ஒரேவிதமான முகபாவனையுடனே காட்சியளிக்கிறார். இன்னும் கொஞ்சம் ‘எக்ஸ்பிரஷன்ஸ்’ காட்டுங்க பிரதர். கதையை நகர்த்துவதற்கு மட்டும் பயன்பட்டிருக்கிறார் நாயகி ஜனனி.
வழக்கம்போல் ஜெயப்பிரகாஷ் தனக்குக் கிடைத்த போலீஸ் ஆபிஸர் வேடத்தை கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார். அதேபோல் டிடெக்டிவ் ஏஜென்சி வைத்திருப்பவர்களாக வரும் பிரதீப், ஜெயக்குமாருக்கும் கவனிக்கத்தக்க கேரக்டர்கள். இவர்களைத் தவிர படத்தில் கவனம் ஈர்க்கும் இன்னொரு கதாபாத்திரம் நாயகனின் நண்பன் ‘நம்பி‘யாக நடித்திருக்கும் காளி வெங்கட். கொஞ்சம் வித்தியாசமான தமிழ்சினிமா நண்பனாக காட்சியளித்திருக்கிறார்.
பலம்
* மோசடி நடக்கும் ஒரு வித்தியாசமான கதைக்களனை தமிழ்சினிமாவில் அறிமுகப்படுத்தியிருப்பது.
* பாடல்களை இடையிடையில் தனியாக சொருகாமல், அத்தனை பாடல்களையுமே ‘மான்டேஜ்’ஜாக கையாண்டிருப்பது.
* இடைவேளைக்கு முன்பு நடக்கும் விறுவிறுப்பான காட்சிகளும். படம் நெடுக ஆங்காங்கே இடம்பெறும் ட்விஸ்ட்களும்.
* போரடிக்காத பாடல்களும், கதைக்கேற்ற பின்னணி இசையும். காட்சிகளை அழகாகப் படம்பிடித்த ஒளிப்பதிவு.
பலவீனம்
* சுவாரஸ்யமில்லாமல் நகரும் படத்தின் முதல் அரைமணி நேரக் காட்சிகள்.
* லாஜிக் ஓட்டைகள் (காட்சிகளைக் குறிப்பிட்டால் சுவாரஸ்யம் குறைந்துவிடும் வாய்ப்பிருப்பதால் தவிர்த்திருக்கிறோம்)
* இரண்டாம் பாதியை கொஞ்சம் இழுத்தடித்த எடிட்டிங்கும், யூகிக்கக்கூடிய க்ளைமேக்ஸும்.
* 2 மணி நேரம் 10 நிமிடம் ஓடக்கூடிய இப்படம், ஏதோ ஒரு நீண்ட படத்தைப் பார்ப்பதைப் போன்ற உணர்வைத் தருவது.
மொத்தத்தில்...
அறிமுக இயக்குனர் என்ற வகையில் பி.ரமேஷ் ஒரு வித்தியாசமான சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தை தர முயன்தற்காக பாராட்டும் அதேவேளையில், வழக்கம்போல் தமிழ்சினிமாவில் நடக்கும் அதே லாஜிக் மீறல்களுக்கு இப்படமும் விதிவிலக்கல்ல என்பதையும் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யத்தைக் கூட்டி, காட்சிகளை ‘ஷார்ப்’பாக வைத்திருந்தால் பெரிய அளவில் பேசப்பட்டிருக்கும் இந்த ‘தெகிடி’.
ஒரு வரி பஞ்ச் : லாஜிக்கைப் பற்றி கவலைப்படாத ரசிகர்களுக்கு வியப்பு... ஹாலிவுட் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு அலுப்பு!
சுவாரஸ்யத் தகவல்கள்
1. இப்படத்தின் இயக்குனர் பி.ரமேஷ் ‘நாளைய இயக்குனர் சீசன் 2’வில் ‘பருதி மாறன்’ என்ற குறும்படத்திற்காக முதல் பரிசை வென்றவர். இரண்டு நாய்களின் மீது ஒரு குடும்பம் வைத்திருக்கும் பாசத்தை நெகிழ்ச்சியாகச் சொன்ன இந்த குறும்படம் பெரிய வரவேற்பைப் பெற்றது.
2. இப்படத்தை முதலில் ஆரம்பித்தது சி.வி.குமாரின் ‘திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம். அதன்பிறகு அவரின் சகோதரர் சி.செந்தில்குமார் ‘வேல் மீடியா’ என்ற நிறுவனத்தை ஆரம்பித்து இப்படத்தை இணைந்து தயாரித்துள்ளார்.
3. ‘தெகிடி’ என்றால் பகடை, சூது விடையாட்டு, புரட்டு என தமிழில் அர்த்தம்!
தயாரிப்பு :வேல் மீடியா
இயக்கம் : பி.ரமேஷ்
நடிப்பு : அஷோக் செல்வன், ஜனனி, ஜெயபிரகாஷ், காளி வெங்கட்
ஒளிப்பதிவு : தினேஷ் கிருஷ்ணன்
இசை : நிவாஸ் கே.பிரசன்னா
எடிட்டிங் : லியோ ஜான் பால்
- top10cinema