ரஜினிகாந்த் மனைவி லதா மீது 10 கோடி ரூபாய் மோசடி வழக்கு!
பொதுவாகவே ரஜினி படங்கள் சரியாக ஓடவில்லை என்றால், ரஜினியிடம் வந்து முறையிட்டு தங்களுக்கான இழப்பீட்டுத் தொகையை விநியோகஸ்தர்கள் கறாராக வசூலித்துக் கொள்வார்கள். வேறு எந்த முன்னணி நடிகரும் தன் படம் ஓடவில்லை என்றால் இதுபோல் நஷ்ட ஈடு வழங்குவது இல்லை. ‘பாபா’, ‘குசேலன்’ போன்ற படங்களுக்கு நஷ்டஈடாக ரஜினி பெரும் தொகையை வழங்கியது நாம் அனைவரும் அறிந்த விஷயம்.
ஏற்கெனவே தனக்குக் கிடைத்த அனுபவங்களால் ‘கோச்சடையான்’ பட ரிலீஸின்போது ரஜினி முன்கூட்டியே தெளிவாக ‘‘தனக்கும் இப்படத்தின் விநியோகத்திற்கும் சம்பந்தமில்லை. என்னிடம் நஷ்டஈடு கேட்டு வரக்கூடாது என தெளிவாகக் கூறிவிட்டார். ஆனால் ரஜினி எதிர்பார்த்ததுபோலவே கோச்சடையானால் தலைவலி ஆரம்பமாகிவிட்டது. ஆனால், இது புது மாதிரியான புகார். அதாவது, கோச்சடையான் பட விநியோகம் தொடர்பாக லதா ரஜினிகாந்த் போட்ட சாட்சிக் கையெழுத்தால், இப்போது அவர்மீது 10 கோடி ரூபாய் ஏமாற்றுப் புகார் ஒன்றைத் தெரிவித்திருக்கிறார் தனியார் கம்பெனியைச் சேர்ந்த அபிர்சந்த் நாகர் என்பவர். அவர் மனுவின் சாராம்சம் இதுதான்...
‘‘நடிகர் ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் திரைப்படம் கடந்த மே மாதம் வெளியானது. இந்த திரைப்படத்தின் தமிழக உரிமையை, அதன் தயாரிப்பாளர் முரளி மனோகர் கடந்த ஏப்ரல் 25ம் தேதி எனது நிறுவனத்துக்கு அளித்தார். இதற்கான ஒப்பந்தத்தில் நானும், முரளி மனோகரும் கையெழுத்திட்டோம். இதற்கு நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா உத்தரவாத கையெழுத்திட்டார். இந்த உரிமத்துக்கு உரிய தொகையை நான் முரளி மனோகருக்கு அளித்தேன். ஒப்பந்ததை மீறி தமிழகத்தில் “கோச்சடையான்“ படத்தின் உரிமையை வேறு யாருக்கும் அளிக்கக் கூடாது. அதை மீறி, வேறு யாருக்கும் உரிமை அளித்தால், நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.
குறிப்பாக, விற்பனை தொகையில் 20 சதவீதமும், லாபத்தில் பங்கும் அளிக்க வேண்டும் என்று ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதை மீறி முரளி மனோகர் வேறு ஒரு நிறுவனத்துக்கு அனைத்து உரிமைகளையும் விற்றார். எனவே, நான் அவர்களிடம் எனக்குரிய நஷ்டஈட்டு தொகையை கேட்டபோது, லதா ரஜினிகாந்தும், முரளி மனோகரும் என்னிடம் படம் வெளியானதும் அந்த தொகையை தருவதாக உறுதி அளித்தனர். நான், அவர்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையின் அடிப்படையில் திரைப்படத்தை வெளியிட அனுமதி அளித்தேன். ஆனால், படம் வெளியாகி ஓடி பல மாதங்களுக்கு பின்னரும், அவர்கள் எனக்கு தரவேண்டிய ரூ.10.2 கோடியை கொடுக்கவில்லை. நான், எனது பணத்தை பலமுறை அவர்களிடம் கேட்டும், அவர்கள் தராமல் இழுத்தடித்து வருகின்றனர். எனவே, அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத் தர வேண்டும்.’’ என்று புகார் கொடுத்திருக்கிறார்.
‘லிங்கா’ பட இசைவெளியீட்டின்போது ரஜினி, ‘‘என் பிள்ளைகள் பணம் சம்பாதிக்கவில்லையென்றாலும் பரவாயில்லை. நான் சேர்த்து வைத்திருக்கும் சொத்தை வீணாக்காமல் இருந்தால் போதும்!’’ என பகிரங்கமாக தன் மகள்கள் சௌந்தர்யா, ஐஸ்வர்யாவுக்கு அறிவுரை கூறினார். இதோ ரஜினி சொன்னதன் அர்த்தம் இப்போது விளங்கியிருக்கும்.
Rajini, Rajinikanth, Kochadaiyaan, Lingaa, Rajini issue, Rajini Money Problem, Soundarya Ashwin, Iswarya Dhanush, Ladha Rajini, Super Star, Baba, Kuselan
No comments:
Post a Comment